கடன் மதிப்பெண் (கிரெடிட் ஸ்கோர்) பற்றி அடிக்கடி கேட்கும் 5 கேள்விகளுக்குப் பதிலளிப்போம்

உங்கள் உலகத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் ஆற்றல் கொண்ட மூன்று வார்த்தைகள்: உங்கள் கடன் மதிப்பெண். உங்கள் மதிப்பெண் அதிகமாக இருந்தால் உங்கள் கனவுகளில் சில நனவாகக் கூடிய வாய்ப்பு சிறப்பாக இருக்கும். நீங்கள் எளிதில் கடன் பெற முடிவதோடு மட்டுமல்லாமல், உங்களுக்குக் குறைந்த வட்டி வீதமும் கிடைக்கும். இதற்கு என்ன பொருள் என்றால், மொத்தத்தில் இந்தக் கடனால் ஏற்படும் செலவு குறைவதோடு உங்கள் வாழ்நாளில் ஒரு கணிசமான தொகையை உங்களால் சேமிக்கவும் முடியும். ஏதோ ஒன்று உங்கள் வாழ்க்கையின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றால் அந்த அளவுக்கு நீங்களும் அது பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கவில்லையா? ஆனால் இலட்சக்கணக்கான இந்தியர்கள் தங்கள் பணத்தைப் பற்றிய ஒரு கண்மூடித்தனமான அணுகுமுறையைக் கையாளுகிறார்கள் என்பது ஒரு சோகமான கதை ஆகும். தங்கள் பொருளாதாரம் நல்ல நிலையில் இருக்க வேண்டும் என்று ஒவ்வொருவருமே விரும்புகிறார்கள் . ஆனால் ஒரு சிலரே சிறந்த  கடன் வரலாற்றைப் பேண வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்படுகிறார்கள்.

 

கடன் மதிப்பெண் பற்றி நீங்கள் அறிந்து கொள்ளுவதற்குத் தொடக்கமாக இங்கு நாங்கள் 5 முக்கியமான மற்றும் அடிப்படைக் கேள்விகளைப் பட்டியல் இட்டுள்ளோம்:

 

  1. ஒரு கடன் அறிக்கையில் என்ன இருக்கிறது?

இந்தக் கேள்விக்கான குறுகிய பதில் இதோ: ஏராளம்! ஒரு வழக்கமான கடன் அறிக்கையில் தனிநபர் அடையாளம் பற்றிய தகவல் உள்ளடங்கி இருக்கும்: கடன் கணக்குகளின் ஒரு பட்டியல் (கடன் அளவெல்லை உட்பட), கணக்கின் வகை (கடன் அட்டை, வீட்டுக் கடன், வாகனக் கடன் போன்றவை), மற்றும் இந்தக் கணக்குகளில் நீங்கள் பணம் செலுத்திவந்த வரலாறு. உங்களுக்குக் கடன் வழங்கும் வங்கிகள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (NBFCs) போன்ற ஆதாரங்களில் இருந்து  முக்கிய நான்கு கடன் அறிக்கைப் பணியகங்கள் (credit reporting bureaus ) தரவைத் திரட்டுகின்றன. இந்த அனைத்துத் தரவின் அடிப்படையில் உங்கள் கடன் தகுதியைப் பிரதிபலிக்கும் ஒரு கடன் மதிப்பெண்ணை இந்தக் கடன் அறிக்கைப் பணியகங்கள் கணக்கிடுகின்றன. கடன் அறிக்கைப் பணியகங்கள் ஒவ்வொன்றும் ஒரு மதிப்பெண்ணைத் தருவதால், உங்களுக்குக் குறைந்த பட்சம் நான்கு மதிப்பெண்கள் இருக்கும். இந்த நான்கு நிறுவனங்களிலும் உங்கள் கடன் வரலாற்றின் சிறு சிறு விவரங்கள் சிறிதளவு மாறுபடலாம். இருப்பினும், உங்கள் கடன் வரலாற்றின் பெரும் சித்திரம் பெரும்பாலும் நிலையாகவே இருக்கும்.

  1. உங்கள் கடன் மதிப்பெண்ணை எந்த வகையான தகவல் பாதிக்கக் கூடும்?

நீங்கள் கடனை எவ்வாறு திருப்பிச் செலுத்துகிறீர்கள் மற்றும் சம மாதத் தவணைகளையும் கடனட்டை பாக்கிகளையும் உரிய நேரத்தில் நீங்கள் எவ்வாறு செலுத்துகிறீர்கள்  என்ற இரு மிக முக்கியக் காரணிகளே உங்கள் கடன் மதிப்பெண்ணை பாதிப்பவை. உங்கள் பாக்கிகளைச் செலுத்த ஒரு மாதம் பிந்திவிட்டீர்கள் என்றால் உங்கள் கடன் மதிப்பெண் சில புள்ளிகள் கீழ் நோக்கிச் சரியக் கூடும்.

அடுத்துக் கடன் விசாரணைகள். அது உங்கள் கடன் மதிப்பெண்ணைப் பாதிக்கக் கூடும். இரு வகையான கடன் விசாரணைகள் உள்ளன: மென்மையானது மற்றும் வன்மையானது. உங்கள் சொந்த மதிப்பெண்ணைச் சோதிக்க நீங்களாகவே செய்யும் மென் விசாரணைகள் உங்கள் கடன் மதிப்பெண்ணுக்குத் தீங்கு விளைவிக்காதவை. ஆனால் நீங்கள் கடனுக்காக விண்ணப்பம் செய்யும் போது கடன் தருபவர்களால் செய்யப்படும் வன் விசாரணைகள் உங்கள் கடன் மதிப்பெண்ணைக் கீழே கொண்டு வந்துவிடலாம். இறுதியில் உங்களுக்குக் கடனும் கிடைக்காமல் போகலாம்.

புதிய கடன் கணக்குகளைத் தொடங்குதல் அல்லது புதிய கடன் பெறுதல் ஆகியவையும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால் முறையாக நேரம் தவறாமல் திருப்பிக் கட்டுவதன் மூலம் இதனை நேர் செய்துவிடலாம். பணம் தருபவர்கள் தங்களது சொந்த  விருப்புவெறுப்பின் படி கடன் பெறுவதற்கான தகுதியை மதிப்பீடு செய்கின்றனர். எந்த மதிப்பெண்ணையும் அவர்கள் பயன்படுத்தலாம். மேலும் அவர்கள் தங்களுக்கே உரிய பாணியில் அந்த மதிப்பெண்களை அளவீடு செய்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் அவர்கள், கடன் மதிப்பெண்களைக் கருதிப்பார்க்காமல் கடன் அறிக்கையை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளலாம்.

 

  1. உங்கள் மதிப்பெண் 700-க்கும் குறைவாக இருக்கிறது. இப்போது என்ன?

குறைந்தபட்சம் எதிர்பாராதவற்றைத் தவிர்க்க உங்கள் கடன் மதிப்பெண்ணை ஆண்டுக்கொருமுறை சோதித்துப் பாருங்கள். ஒவ்வொரு ஆண்டும் ஓர் இலவசக் கடன் அறிக்கையை CRIF-இடம் இருந்து  பெற உங்களுக்கு உரிமை உண்டு. இது ஒரு மென் விசாரணை.

உங்கள் கடன் மதிப்பெண் 700-க்கும் குறைவாக இருந்தால் உங்கள் கடன் அறிக்கையை ஆழமாக ஆராய்ந்து குறைவான கடன் மதிப்பெண்ணுக்கான காரணங்களைக் கண்டறிய வேண்டும். உங்கள் கடன் அட்டைப் பாக்கி மற்றும் கடன் பயன்பாட்டு விகிதத்தை ஆய்வு செய்யுங்கள். நீங்கள் உங்கள் அதிகபட்சக் கடன் எல்லையை எட்டஎட்ட அது உங்கள் மதிப்பெண்ணைக் குறைக்கலாம். இதனால் முடிந்தால் இந்தப் பாக்கிகளை அடைத்துவிட வேண்டும். உங்களோடு சம்பந்தப்படாத பிழைகள்/தகவல் கடன் அறிக்கையில் பட்டியல் இடப்பட்டுள்ளனவா என்று சோதிக்கவும். அப்படி இருந்தால், நீங்கள் உடனடியாகக் கடன் பணியகங்களிடமோ அல்லது வங்கிகளிடமோ அதை அறிவித்து உங்கள் தகவலை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.

நீண்ட நாள் கடன் வரலாறுள்ள உங்கள் கடன் அட்டையைத் திடீரென முடிப்பதும் உங்கள் கடன் மதிப்பெண்ணை எதிர்மறையாகப் பாதிக்கக்கூடும். எவ்வளவு நீண்ட காலத்திற்கு நீங்கள் கடன் வாங்குகிறீர்களோ அதுவும் உங்கள் மதிப்பெண் மேல் தாக்கத்தை ஏற்படுத்தும். எவ்வளவு நீண்ட காலமோ அவ்வளவு சிறப்பானது.

 

  1. ஒரு மோசமான கடன் மதிப்பெண் எவ்வளவு காலம் நீடிக்கிறது?

கடன்களுக்கு ஒரு திட்டவட்டமான கால வரையறை உண்டு. மேலும் உங்கள் கடன் அறிக்கையில் காணப்படும் எதிர்மறையான தகவலும் அப்படிப்பட்டதே. கடன் அறிக்கையில் இருக்கும் எதிர்மறையான தகவல் 7 ஆண்டுகளுக்குப் பின் பெரும்பாலும் கடன் மதிப்பெண்ணைப் பொறுத்த வரையில் மதிப்புக் குறைந்தாக மாறத் தொடங்கும். உங்கள் கடன் நடத்தையில் நிலைத்தன்மையைக் காட்ட, நீங்கள் திருப்பிக் கட்டும் தொகையும் கடன்  செயல்பாடுகளும் முறையாகவும் காலந்தவறாமலும் இருக்கட்டும். இது முடிவில் உங்கள் கடன் மதிப்பெண்ணைச் சிறந்த பக்கத்தை நோக்கித் தள்ளிச் செல்லும்.

 

  1. உங்கள் கடன் அறிக்கையை யார் பார்க்கலாம்?

உங்கள் கடன் அறிக்கை, பொதுமக்கள் பார்வைக்குக் கிடைக்காது. உங்கள் அனுமதியின் பேரிலேயே அதை அணுக முடியும். நீங்கள் ஒரு கடன் அல்லது கடனட்டைக்கு விண்ணப்பம் செய்யும் போது, உங்கள் கடன்பெறும் தகுதி மற்றும் கடனைத் திருப்பி செலுத்தும் சாத்தியம் மற்றும் திறனைத் தீர்மானிக்க வங்கி போன்ற கடன் வழங்குபவர்கள் உங்களைப் பற்றிய தகவலை ஆய்வு செய்ய வேண்டிய தேவை இருப்பதால் உங்களது அனுமதியை மறைமுகமாகப் பெறுகின்றனர்.

இப்போது நாங்கள் கடன் மதிப்பெண்ணின் அடிப்படையை உங்களுக்கு விளக்கிவிட்டதால், காலதாமதம் செய்யாமல், இந்த நடைமுறைகளைப் பின்பற்றி இப்போதே ஒரு சிறந்த கடன் வரலாற்றை உருவாக்கத் தொடங்குங்கள்!